
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியதுடன், மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.
இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த வங்கதேச அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு தோல்விகளைச் சந்தித்து லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் வங்கதேசத்தின் மூத்த ஆல்ரவுண்டர் மஹ்முதுல்லா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார், இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கும் மேலான அவரது குறிப்பிடத்தக்க கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
மேலும் தனது ஓய்வு முடிவை மஹ்முதுல்லா தனது சமூக வலைதள பதிவின் மூலம் அறிவித்துள்ளார். அதன்படி அவரது பதிவில், “நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துவிட்டேன். எனக்கு எப்போதும் ஆதரவளித்த எனது சக வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் குறிப்பாக எனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது பெற்றோர், சிறுவயதிலிருந்தே எனது பயிற்சியாளராகவும் வழிகாட்டியாகவும் இருந்த எனது சகோதரர் எம்தாத் உல்லா ஆகியோருக்கு மிக்க நன்றி” என்று தெரிவித்துள்ளார்.