
இந்திய மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. அதன்படி சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி விளையாடிய வங்கதேச அணியில் திலார அக்தர் 10 ரன்களுக்கும், சோபனா 19 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் நிகர் சுல்தானா 6 ரன்களிலும், ஃபஹிமா கதும் ரன்கள் ஏதுமின்றியும், சுல்தானா கதும் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் முர்ஷிதா கதுமுடன் இணைந்த ரிது மோனி ஓரளவு தாக்குப்பிடித்து விக்கெட் இழப்பை தடுத்தார்.
அதன்பின் 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிது மோனி தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முர்ஷிதா கதும் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.