
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது மூன்றாவது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸும், இரண்டாவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் தொடரின் அடுத்த சீசனுக்கான வீராங்கனைகள் ஏலம் கடந்த டிசம்பர் 15 பெங்களூருவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பெரும்பாலான அணிகள் முக்கிய வீராங்கனைகளை தக்க வைத்ததன் காரணமாக 19 இடங்களுக்கு மட்டுமே இந்த ஏலமானது நடைபெற்றது.
இந்த ஏலத்தில் இந்திய வீராங்கனைகள் சிம்ரன் ஷேக், ஜி கமாலினி, பிரேமா ராவத் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் டியோன்ட்ரா டோட்டின் உட்பட நான்கு வீராங்கனைகள் தலா ரூ.1 கோடிக்கு ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நடந்து முடிந்த இந்த ஏலத்தில் இந்திய வீராங்கனை சிம்ரன் ஷேக் ரூ.1.9 கோடிக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டதன் மூலம், இந்த ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் சென்ற வீராங்கனை எனும் பெருமையையும் பெற்றார்.