
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. செஞ்சூரியன் நகரில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற உள்ள இத்தொடரில் தென் ஆப்பிரிக்கா தங்களுடைய மிகப்பெரிய கெளரத்தை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.
அதாவது 1992 முதல் இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடிய 8 டெஸ்ட் தொடர்களில் 7 வெற்றியை பதிவு செய்துள்ள அந்த அணி தோல்வியை சந்தித்ததே கிடையாது. மறுபுறம் கடைசியாக எம்எஸ் தோனி தலைமையில் கடந்த 2011ஆம் ஆண்டு 1 – 1 கணக்கில் தொடரை சமன் செய்த இந்தியா காலம் காலமாக தென் ஆப்பிரிக்க மண்ணில் சந்தித்து வரும் தோல்விகளை இம்முறை எப்படியாவது நிறுத்தும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.
இந்நிலையில் தங்களுடைய சொந்த ஊரில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் தரமும் திறமையும் இந்திய அணியிடம் இருப்பதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா கூறியுள்ளார். எனவே இத்தொடரை வென்று சொந்த மண்ணில் தோற்காமல் இருந்து வரும் கௌரவ சாதனையை தக்க வைத்துக்கொள்ள தாங்கள் சிறப்பாக செயல்படுவது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.