பிபிஎல் 2022: காலின் முன்ரோ போராட்டம் வீண்; சிட்னி தண்டரிடம் வீழ்ந்தது பிரிஸ்பேன் ஹீட்!
பிக்பேஷ் லீக்கில் சிட்னி தண்டருக்கு எதிரான போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது.
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான பிக்பேஷ் டி20 லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகீறது. இதில் குயின்ஸ்லாந்தில் இன்று நடந்த போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணியின் தொடக்க வீரர் மேத்யூ கில்ஸ் 37 ரன்களும், ரைலீ ரூசோ 39 ரன்களும் அடித்தனர். அலெக்ஸ் ரோஸ் 12 பந்தில் 25 ரன்கள் அடிக்க, டேனியல் சாம்ஸ் காட்டடி அடித்து 15 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 36 ரன்களை விளாசினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி தண்டர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை குவித்தது.
Trending
இதையடுத்து 183 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய பிரிஸ்பேன் ஹீட் அணியில், தொடக்க வீரர் காலின் முன்ரோ மட்டுமே சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். அதிலும் குறிப்பாக சாம் பில்லிங்ஸ், ஜிம்மி பெர்சன், மேக்ஸ் பிரையண்ட் போன்ற அதிரடி வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
ஒருமுனையில் ஒற்றை இலக்கத்தில் அடுத்தடுத்து வீரர்கள் அவுட்டாக, மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய காலின் முன்ரோ சதத்தை நெருங்க, கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரின் முதல் பந்து நோ பால். ஆனால் அதில் முன்ரோ ஒரு ரன் மட்டுமே அடித்தார். ரீபால் வீசப்பட்ட முதல் பந்தில் மைக்கேல் நெசெர் ஒரு ரன் அடித்தார்.
அதன்பின் 98 ரன்களுடன் தனது சதத்தை நெருங்கியது மட்டுமல்லாது, பிரிஸ்பேன் ஹீட்டின் வெற்றிக்கும் நம்பிக்கையளித்த முன்ரோ, 2ஆவது பந்தில் ஆட்டமிழந்து இரண்டையுமே தவறவிட்டார். 98 ரன்களுக்கு முன்ரோ ஆட்டமிழந்து சதத்தை தவறவிட, பிரிஸ்பேன் ஹீட் அணி அதன்பின்னர் எஞ்சிய 4 பந்தில் ஒரு ரன் மட்டுமே அடித்து 2 விக்கெட்டையும் இழந்தது.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் பிரிஸ்பேன் ஹீட் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை மட்டுமே அடித்து. சிட்னி அணி தரப்பில் நாதன் மெக்ண்ட்ரூ 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் சிட்னி தண்டர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now