
பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் - பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹரிகேன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் பென் மொக்டர்மோட் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த டி ஆர்சி ஷார்ட்- மேத்யூ வேட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஷார்ட் 35 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்த கையோடு 51 ரன்களில் மேத்யூ வேடும் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் சதாப் கான் 26 ரன்களில் விக்கெட்டை இழக்க, கடைசிவரை களத்தில் இருந்த டிம் டேவிட் 28 பந்துகளில் 46 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களைச் சேர்த்தது. பெர்த் அணி தரப்பில் ஜெய் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.