பிபிஎல் 2023: டிம் டேவிட் அதிரடி; ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அபார வெற்றி!
சிட்னி தண்டருக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
பிக் பேஷ் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 42ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் - ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் ரன் ஏதுமின்றியும், மேத்யூ கில்க்ஸ் 13 ரன்களிலும், வைட்மேன் 5 ரன்களிலும், ரோஸ் 2 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து வந்த டேனியல் சாம்ஸும் 9 ரன்களுக்கு நடையைக் கட்டினர்.
Trending
இருப்பினும் நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஒலிவியர் டேவிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 38 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 45 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து பென் கட்டிங் 20, கிறிஸ் கிரின் 21 என தங்களால் முடிந்த ரன்களைச் சேர்த்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி தண்டர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹாபர்ட் அணி தரப்பில் நாதன் எல்லிஸ் 4 விக்கெட்டுகளையும், பேட்ரிக் தூலே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணியிலும் டாப் ஆர்டர் பேட்டர்கள் கொலெப் ஜுவெல், பென் மெக்டர்மோட், ஸாக் கிரௌலி ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த மேத்யூ வேட் - டிம் டேவிட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின் 30 ரன்களில் மேத்யூ வேட் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஆசிஃப் அலியும் 5 ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இருப்பினும் மறுமுனையில் அரைசதம் கடந்த டிம் டேவிட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 41 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்சர்களை விளாசி 76 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். இதன்மூலம் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 16.1 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் சிட்னி தண்டர் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now