
பிக்பேஷ் டி20 லீக் தொடரின் 12ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மெல்பர்னில் இன்று நடந்த லீக் போட்டியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் மேத்யூ ஷார்ட் 20 ரன், ரியான் கிப்சன் 10 ரன், கிறிஸ் லின் ஒரு ரன், ஆடம் ஹோஸ் 21 ரன், தாமஸ் கெல்லி 6 ரன்கள் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடைடைக் கட்டினர்.
இருப்பினும் அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஹாரி நீல்சன் அதிகபட்சமாக 40 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் அந்த அணி 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியில் அபாரமாக பந்துவீசிய நாதன் குல்ட்டர் நைல் 4 ஓவரில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆடம் ஸாம்பா மற்றும் ஹாட்ச்சர் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.