
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 50ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டிக்கு முன்னதாக மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதில் டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஜோஷ் பிலீப், குர்டின் பேட்டர்சன் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக விளையாடியது மட்டுமின்றி பவுண்டரியும், சிக்சர்களையும் பறக்கவிட்டார்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித் சதமடித்து அசத்தினார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்மித் 66 பந்துகளில் 5 பவுண்டரி, 9 சிக்சர்கள் என 125 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் சிட்னி சிக்சர்ஸ் அணி 19 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 182 ரன்களைச் சேர்த்தது.