
பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 33ஆவது லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹாபர்ட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஹாபர்ட் அணிக்கு பென் மெக்டர்மோட் - மேத்யூ வேட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பென் மெக்டர்மோட் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் மேத்யூ வேட் 14 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த மெக்லிஸ்டர் - கலெப் ஜெவெல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 37 ரன்களுக்கு மெக்லிஸ்டரும், 32 ரன்களுக்கு ஜெவெலும் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதையடுத்து களமிறங்கிய நிகில் சௌத்ரி, டிம் டேவிட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தலா 22 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தனர். இறுதியில் கோரி ஆண்டர்சன் 18 ரன்களைச் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்தது. அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி தரப்பில் தொர்ண்டன், ஜேமி ஓவர்டன், பொய்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.