பிபிஎல் 13: பரபரப்பான ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தி மெல்போர்ன் ஸ்டார்ஸ் த்ரில் வெற்றி!
ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹாபர்ட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஹாபர்ட் அணிக்கு மேத்யூ வேட் - கலெப் ஜெவெல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மேத்யூ வேட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜெவெலுடன் இணைந்த மகலிஸ்டர் ரைட் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெவெல் 45 ரன்களிலும், ரைட் 33 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.
Trending
பின்னர் களமிறங்கிய கோரி ஆண்டர்சன், டிம் டேவிட் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, நிகில் சௌத்ரி அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 32 ரன்களைச் சேர்த்து அணிக்கு உதவினார். இதனால் 19.4 ஓவர்களில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மெல்போர்ன் அணி தரப்பில் ஹாரிஸ் ராவுஃப், கேப்டன் மேக்ஸ்வெல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கிய நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு 7 ஓவர்களில் 67 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய மெல்போர்ன் அணிக்கு கேப்டன் மேக்ஸ்வெல் - சாம் ஹார்ப்பர் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் சாம் ஹார்ப்பர் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸும் ரன்கள் ஏதுமின்றி ரைலி மெரிடித் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து வந்த ஹில்டன் கார்ட்ரைட் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் நாதன் எல்லிஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் மேக்ஸ்வெல்லுடன் இணைந்த தாமஸ் ரோஜர்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து விக்கெட் இழப்பை தடுத்தார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் சிக்சர்களை பறக்கவிட்டு அணியின் வெற்றிக்கு உதவினார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளென் மேக்ஸ்வெல் 4 சிக்சர்களை விளாசி 35 ரன்களையும், தாமஸ் ரோஜர்ஸ் 4 பவுண்டரிகளை விளாசி 21 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 6.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு சீசனில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்திய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.
Win Big, Make Your Cricket Tales Now