
பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹார்பர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு ஜோஷ் பிலீப் - ஜேம்ஸ் வின்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜேம்ஸ் வின்ஸ் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த கர்டிஸ் பேட்டர்சன் 7 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் பிலீப்புடன் இணைந்த கேப்டன் ஹென்றிஸுக்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோஷ் பிலீப் 41 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின் ஹென்றிக்ஸ் 22, ஜோர்டன் சில்க் 5, டாம் கரண் 3, ஜேக் எட்வர்ட்ஸ் 22, சீன் அபோட் 8 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி சிக்சர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை மட்டுமே எடுத்தது.