
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 35ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டீவ் எஸ்கின்ஸி - வைட்மேன் களமிறங்கினர்.
இதில் வைட்மேன் 7 ரன்களிலும், எஸ்கின்ஸி 12 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஆரோன் ஹார்டியும் 9 ரன்களிலும், நட்சத்திர வீரர் ஜோஷ் இங்லிஸ் 5 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த லௌரி எவான்ஸ் - கூப்பர் கன்னொலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் எவான்ஸ் 28 ரன்களையும், கன்னொலி 35 ரன்களையும் சேர்த்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நிக் ஹாப்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 48 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களைச் சேர்த்தது. பிரிஸ்பேன் அணி தரப்பில் மைக்கேல் நேசர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.