
பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 13ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 34ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. மேலும் சமீபத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இன்றைய போட்டியில் இடம்பிடித்திருந்தார்.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய சிக்சர்ஸ் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் - ஜேம்ஸ் வின்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்டீவ் ஸ்மித் முதல் பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த வின்ஸ் - பிலீப் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் வின்ஸ் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹென்றிக்ஸும் 8 ரன்களில் நடையைக் கட்டினார்.
அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிலீப் 47 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஜோர்டன் சில்க்கும் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவற, 20 ஓவர்கள் முடிவில் சிட்னி சிக்சர்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்தது. தண்டர் அணி தரப்பில் மெக்கண்ட்ரூ, தன்வீர் சங்கா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.