
14ஆவது சீசன் பிக் பேஷ் லீக் தொடரானது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஸ்டார்ஸை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் தொடக்க வீரர் சாம் ஹார்பர் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த பென் டக்கெட் - பியூ வெப்ஸ்டர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் பென் டக்கெட் 20 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டேன் லாரன்ஸ் 14 ரன்களுக்கும், கேப்டன் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 4 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 60 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் வெப்ஸ்டருடன் இணைந்த கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பியூ வெப்ஸ்டர் 48 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து அசத்திய கிளென் மேக்ஸ்வெல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 58 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது. சிட்னி அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய் சீன் அபோட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.