
பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு மேத்யூ வேட் மற்றும் மிட்செல் ஓவன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மேத்யூ வேட் 15 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப்பும் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த மிட்செல் ஓவன் - கேப்டன் பென் மெக்டர்மோட் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மிட்செல் ஓவன் 33 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய பென் மெக்டர்மோட் 34 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
இறுதியில் நிகில் சௌத்ரி அதிரடியாக விளையாடி 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 42 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்களைக் குவித்தது. சிட்னி சிக்ஸர்ஸ் அணி தரப்பில் ஜேக்சன் பெர்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஜோஷ் பிலீப், ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் கர்டிஸ் பேட்டர்சன் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.