
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹோபர்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு ஃபின் ஆலான் மற்றும் ஜென்னிங்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபின் ஆலன் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கூப்பர் கனொலியும் 14 ரன்களில் நடையைக் கட்டினார். அதன்பின் ஜென்னிங்ஸுடன் இணைந்த ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஜென்னிங்ஸ் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 35 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் இங்லிஷுடன் இணைந்த ஆஷ்டன் டர்னரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது. இதில் அரைசதத்தை நெருங்கிய ஜோஷ் இங்கிலிஸ் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 49 ரன்களில் ஆட்டமிழக்க, 39 ரன்களில் ஆஷ்டன் டர்னரும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற பெர்த் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை மட்டுமே எடுத்தது. ஹோபர்ட் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரைலீ மெரிடித் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.