
பிக் பேஷ் லீக் கிரிக்கெட் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு பென் டக்கெட் மற்றும் தாமஸ் ரோஜர்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பென் டக்கெட் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி வந்த நிலையில், மறுமுனையில் விளையாடிய தாமஸ் ரோஜர்ஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சாம் ஹார்ப்பரும் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து அசத்திய பென் டக்கெட் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 68 ரன்களை எடுத்த கையோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் தனது பங்கிற்கு 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 32 ரன்களை எடுத்து விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஸ்டோய்னிஸ் 20 ரன்களிலும், கார்ட்ரைட் 15 ரன்னிலும், டாம் கரண் 15 ரன்னிலும் உசாமா மிர் 2 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மெல்பொர்ன் ஸ்டார்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 194 ரன்களைச் சேர்த்தது. சிட்னி சிக்ஸர்ஸ் அணி தரப்பில் ஜேக்சன் பிர்ட் 3 விக்கெட்டுகளையும், பென் துவார்ஷுயிஸ், டாட் மர்ஃபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.