
பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 32ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ரெனிகேட்ஸ் அணி பந்துவீசுவதாக அறிவித்து ஸ்டார்ஸை பேட்டிங் செய்யுமாறு அழைத்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் சாம் ஹார்பர் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக தொடங்கிய பென் டக்கெட்டும் 21 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய பியூ வெப்ஸ்டர் 15 ரன்களுக்கும், தாமஸ் ரோஜர்ஸ் ரன்கள் எதுமின்றியும், கேப்டன் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 18 ரன்களிலும், கார்ட்ரைட் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 63 ரன்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமறியது.
இதற்கிடையில் 6அவது விக்கெட்டாக களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். ஆனாலும் மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர். விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தாலும், மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளென் மேக்ஸ்வெல் அரைசதம் கடந்து அசத்தியதுடன், இறுதிவரை களத்தில் இருந்து 4 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் என 90 ரன்களை சேர்த்தார். இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களைச் சேர்த்தது.