
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 14ஆவது சீசன் பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய பெர்த் அணியில் தொடக்க வீரர் ஃபின் ஆலன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த மேத்யூ ஹர்ஸ்ட் - கூப்பர் கன்னொலி இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் மேத்யூ ஹர்ஸ்ட் 28 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கூப்பர் கன்னொலி 37 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் ஆரோன் ஹார்டி 24 ரன்னிலும், அணியின் கேப்டன் ஆஷ்டர் டர்னர் 22 ரன்னிலும், ஆஷ்டன் அகர் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இறுதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக் ஹாப்சன் 16 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 47 ரன்களைக் குவித்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. பிரிஸ்பேன் தரப்பில் ஸ்பென்சர் ஜான்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.