
ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டு வரும் டி20 லீக் தொடரான பிக் பேஷ் லீக்கின் 14ஆவது சீசன் இன்று கோலாகலாமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு தொடக்க வீரர்களாக ஜோ கிளார்க் மற்றும் தாமஸ் ரோஜர்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜோ கிளார்க் ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து களமிறங்கிய சாம் ஹார்பர் ஒரு ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரர் தாமஸ் ரோஜர்ஸ் 14 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய கார்ட்ரைட் 18 ரன்களிலும், பியூ வெப்ஸ்டர் 19 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து 37 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஸ்டொய்னிஸும் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய டாம் கரண் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்ட நிலையில், மறுபக்கம் மெக்கன்ஸி, ஆடம் மில்னே உள்ளிட்டோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். பின் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களை எடுத்திருந்த டாம் கரணும் விக்கெட்டை இழக்க, மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களை மட்டுமே சேர்த்தது. பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி தரப்பில் ஜெய் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளையும், லான்ஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.