
பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடிபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் மெல்பொர்ன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கான்பெர்ராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிட்னி தண்டர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதனையடுத்து முதலில் விளையாடிய தண்டர் அணிக்கு கேப்டன் டேவிட் வார்னர் - கேமரூன் பான்கிராஃப்ட் இணை அதிரடியாக தொடங்கியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் டேவிட் வார்னர் 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் விளையாடி வந்த கேமரூன் பான்கிராஃப்ட் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஒலிவியர் டேவிஸூம் ரன்கள் ஏதுமின்றி நடையைக் கட்ட தண்டர் அணி 45 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த ஜேசன் சங்கா - சாம் பில்லிங்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஜேசன் சங்கா 33 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் பில்லிங்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், கிறிஸ் கிரீன் ஆகியோர் ஆட்டமிழந்தனர். பிறகு 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 72 ரன்களில் சாம் பில்லிங்ஸும் ஆட்டமிழக்க தண்டர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது. ஸ்டார்ஸ் தரப்பில் பியூ வெப்ஸ்டர் 3 விக்கெட்டுகளையும், சிடில், உசாமா மிர் விக்கெட்டுகளியும் கைப்பற்றினர்.