பிபிஎல் 13: இரண்டாவது முறையாக கோப்பையை வென்றவது பிரிஸ்பேன் ஹீட்!
சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் இறுதிப்போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பிரிஸ்பேன் அணியின் தொடக்க வீரர் பெர்சன் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் இணைந்த ஜோஷ் பிரௌன் - கேப்டன் மெக்ஸ்வீனி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 85 ரன்களைச் சேர்த்தனர். இதில் ஜோஷ் பிரௌன் அரைசதம் அடித்தார்.
Trending
அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மெக்ஸ்வீனி 33 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த சில பந்துகளிலேயே 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 53 ரன்களில் ஜோஷ் பிரௌனும் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த மேத்யூ ரென்ஷா 40 ரன்களையும், மேக்ஸ் பிரையண்ட் 29 ரன்களையும் சேர்த்ததைத் தவிற மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பிரிஸ்பேன் ஹீட் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களைச் சேர்த்தது. சிக்சர்ஸ் தரப்பில் சீன் அபோட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர் டேனியல் ஹியூஸ் ஒரு ரன்னிலும், ஜேக் எட்வர்ட்ஸ் 16 ரன்களுக்கும், ஜோஷ் பிலீப் 23 ரன்களுக்கும், கேப்டன் ஹென்றிக்ஸ் 25 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் சிட்னி சிக்சர்ஸ் அணி 57 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது.
அதன்பின் களமிறங்கிய ஜோர்டன் சில்க், ஜொயல் டேவிஸ், ஹெய்டன் கெர், பென் துவார்ஸூயிஸ், சீன் அபோட், ஸ்டீவ் ஓ கீஃப் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் சிட்னி சிக்சர்ஸ் அணி 17.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்களில் ஆல் அவுட்டானது. பிரிஸ்பேன் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஸ்பென்சர் ஜான்சன் 4 விக்கெட்டுகளையும், ஸேவியர் பார்ட்லெட், மிட்செல் ஸ்வெப்சன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பாண்டு பிக் பேஷ் லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இதன்மூலம் 11 ஆண்டுகளுக்கு பிறகு பிரிஸ்பேன் ஹீட் அணி பிபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசனில் பிரிஸ்பேன் ஹீட் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now