
நடப்பு ஆண்டிற்கான ஐசிசி-யின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று மதியம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியில் ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதி வருகின்றன.
இந்த ஆண்டு முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பை தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று இருந்த வேளையில் இந்த முதல் போட்டிக்கான ஏற்பாடுகள் அகமதாபாத் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்று வந்தன. மேலும் இந்த முதல் நாள் போட்டியின் டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்று தீர்ந்ததால் இன்று அகமதாபாத் மைதானம் ரசிகர் கூட்டத்தால் நிரம்பி காணப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒரு லட்சம் ரசிகர்களின் ஆரவாரத்தால் மைதானமே அதிரப்போகிறது என்றெல்லாம் பேசப்பட்டது.
ஆனால் போட்டியின் முதல் நாளான இன்று துவக்கத்தில் மைதானத்தின் பெரும்பாலான பகுதிகள் காலியாக இருந்ததால் தற்போது பிசிசிஐ-க்கு பெரிய வருத்தம் ஏற்பட்டுள்ளது. மேலும் பிசிசிஐ சார்பில் இன்றைய போட்டியை நேரில் காண வந்தவர்களின் எண்ணிக்கை 40,000 என்று தகவல் வெளியிட்டு இருந்தாலும் மைதானத்தில் அவ்வளவு கூட்டம் இல்லை என்பதே அனைவரது கருத்தாகவும் உள்ளது.