
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக யார் செயல்படப்போகிறார் என்ற கேள்வி சூடுபிடித்துள்ளது. தற்போது பயிற்சியாளராக இருந்து வரும் ரவி சாஸ்திரி, மீண்டும் விண்ணப்பிக்க விருப்பம் தெரிவிக்காததால், அடுத்த பயிற்சியாளரை பிசிசிஐ அணுகியுள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே பதவி விலகியதில் இருந்து தற்போது வரை ரவி சாஸ்திரிதான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு பல தொடர்களை கைப்பற்றிய போதும் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை. இதனால் அவர் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் அவரின் பதவிக்காலம் முடிவடைவதால் அடுத்த பயிற்சியாளருக்கான தேடுதலில் பிசிசிஐ திவீரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி வெளிநாட்டு பயிற்சியாளர்களை விரும்பாமல், இந்தியாவின் ஜாம்பவான்கள் ராகுல் டிராவிட், லட்சுமணன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதற்கு ராகுல் டிராவிட் சம்மதிக்கவில்லை. எனினும் பிசிசிஐ தலைவர் கங்குலி, நிச்சயம் இந்திய பயிற்சியாளர் தான் இருக்க வேண்டும் என திட்டவட்டமாக இருந்ததாக தெரிகிறது.