பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்த ஈசிபி!
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த, டெஸ்ட் தொடரின் போட்டி அட்டவணையை மாற்ற பிசிசிஐ வைத்த கோரிக்கைக்கு இங்கிலாந்து வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து கிளம்புகிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. இதில், இங்கிலாந்து தொடரின் அட்டவணையை மாற்ற பிசிசிஐ கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.
அதாவது, இங்கிலாந்து உடனான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கி, செப்.14ஆம் தேதி முடிவடைகிறது. நாட்டிங்காம், லார்ட்ஸ், லீட்ஸ், ஓவல் மற்றும் ஓல்ட் ட்ராஃபோர்டு ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில், பிசிசிஐ முன்வைத்ததாக கூறப்படும் கோரிக்கை என்னவென்றால், ஓல்ட் ட்ராஃபோர்டில் செப்.10ஆம் தேதி தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டி தேதியை மாற்றி, சற்று முன்னதாகவே அதாவது ஜுலை மாதமே நடத்தலாம். இதன் மூலம், செப்டம்பர் மாதம் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை இங்கிலாந்தில் நடத்த முடியும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
Trending
இதுகுறித்து இங்கிலாந்து வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "கோவிட் -19 இன் சவால்களை நாங்கள் எதிர்கொள்வதால், பி.சி.சி.ஐ உடன் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆனால் தேதிகளை மாற்றுவதற்கான கோரிக்கை எதுவும் வரவில்லை. ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்கான அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது" என்றார்.
அதேசமயம், இங்கிலாந்து ஊடகங்கள், பிசிசிஐ தேதி மாற்றுவதற்கான கோரிக்கையை முன்வைத்தது என்று செய்தி வெளியிட்டு வருகின்றன. இதுகுறித்து டைம்ஸ் லண்டன் பத்திரிகையில் வெளியான செய்தியில், "ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்காக, டெஸ்ட் தொடர் அட்டவணையை மாற்றுவது குறித்து இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களின் அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், கடைசி டெஸ்ட் போட்டிக்கான முதல் மூன்று நாள் டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டதாகவும், இனி அதில் மாற்றம் செய்வது பெரும் தலைவலியாக இருக்கும்" என்றும் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now