
கடந்த 2016-17ஆம் ஆண்டில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளாக அனில் கும்ப்ளே இருந்தபோது, கேப்டன் கோலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் பயிற்சியாளர் பதவியிலிருந்து கும்ப்ளே விலகினார். பயிற்சியாளர் பதவியிலிருந்து கும்ப்ளே விலகுவதற்கு விராட் கோலி பல்வேறு விதத்தில் காரணமாக இருந்தார், அவருடன் மோதலில் ஈடுபட்டார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.
சச்சின், கங்குலி, விவிஎஸ் லட்சுமண் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக் குழு அப்போது பயிற்சியாளராக கும்ப்ளேவை நியமித்தது. ஆனால், கோலியின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த கும்ப்ளே, பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்குப்பின் பதவியிலிருந்து விலகினார்.
அதன்பின் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். 2019 ஒருநாள் உலகக்கோப்பையின் போதே அவரது பயிற்சிகாலம் முடிவடைந்த நிலையில், கோலியின் ஆதரவால் மேலும் 2 ஆண்டுகள் ரவி சாஸ்திரி அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.