
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்று மான்செஸ்டர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இருந்ததால் கடைசி போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியானது 259 ரன்கள் குவித்தது. அதனைத்தொடர்ந்து 260 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த சேசிங்கின் போது துவக்கத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் ரிஷப் பண்ட் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி எளிதாக அந்த இலக்கை சேசிங் செய்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ஹார்டிக் பாண்டியா 71 ரன்களையும், ரிஷப் பண்ட் 125 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தனர்.
மேலும் இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த ஒருநாள் தொடரை கடந்த எட்டு ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி அசத்தியது. கடைசியாக இந்திய அணி 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றிய வேளையில் தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு ரோகித் சர்மா தலைமையில் இந்த ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.