
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, 2019லிருந்து பிசிசிஐ தலைவராக இருந்துவருகிறார். பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகிய இருவரது பதவிக்காலமும் முடிவடைந்துவிட்ட நிலையில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படாததால் அவர்கள் இன்னும் அவர்களது பதவிகளில் நீடித்துவருகின்றனர்.
இந்நிலையில், சௌரவ் கங்குலி இன்று பதிவிட்ட டுவீட், அவர் பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து விலகுகிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரது பதிவில்,“1992ஆம் ஆண்டிலிருந்து கிரிக்கெட்டில் இருந்துவரும் எனக்கு இந்த 2022ஆம் ஆண்டு வரையிலான 30 ஆண்டுகள் சிறந்த பயணமாக அமைந்தது. கிரிக்கெட் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. எனக்கு உங்கள் அனைவரது ஆதரவையும் பெற்று தந்திருக்கிறது. எனது கிரிக்கெட் கெரியரில் இன்று நான் இவ்வளவு உயர்ந்த இடத்தில் இருப்பதற்கு எனக்கு ஆதரவாக இருந்தவர்கள், உதவியவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நிறைய மக்களுக்கு பயனுள்ள விதத்தில் இருக்கும் ஒரு விஷயத்தை இன்று தொடங்குகிறேன். இப்போது போல் எப்போதும் உங்களது ஆதரவு இருக்கும் என நம்புகிறேன்” என்று கங்குலி பதிவிட்டிருந்தார்.