
ஆசியக் கோப்பைத் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்ல விரும்பாததால், நடுநிலையான இடத்தில் தொடரை நடத்த பிசிசிஐ கோரிக்கை வைத்தது. இதையடுத்து ஹைபிரிட் மாடலில் பாகிஸ்தானில் 4 போட்டிகளும், இலங்கையில் 9 போட்டிகளையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.
இருப்பினும் ஆசியக் கோப்பைக்கான அட்டவணை வெளியாகாததால், இந்திய அணி பாகிஸ்தான் செல்ல வாய்ப்பிருப்பதாக பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆசியக் கோப்பைத் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் பயணம் செல்லவுள்ளதாக பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதனிடையே நாளை தென் ஆப்பிரிக்காவில் ஐசிசியின் அலுவல் கூட்டம் நடக்கவுள்ளது. இதற்காக அனைத்து நாடுகளின் கிரிக்கெட் சங்க தலைவர்களும் தென் ஆப்பிரிக்கா வந்துள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் சாகா அஷ்ரப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சந்தித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆசியக் கோப்பைக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.