
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடிவருகின்றன. இரு நாடுகளுக்கு இடையே நல்ல உறவு இல்லாததால் இந்திய அரசு, இந்திய அணியை பாகிஸ்தானுக்கு சென்று விளையாட அனுமதிப்பதில்லை.
2012ம் ஆண்டுக்கு பின் இரு அணிகளும் இருதரப்பு தொடரில் ஆடவில்லை. 2006ம் ஆண்டுக்கு பின் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடவில்லை. ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து ஆட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவருமே விரும்புகின்றனர். இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரிகளுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பலமுறை விருப்பம் தெரிவித்தது. ஆனால் பிசிசிஐ பிடி கொடுக்கவில்லை.
அடுத்த ஆண்டு 50 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடத்துவதாக திட்டமிடப்பட்டது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசு அனுமதித்தால் தான் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல முடியும். ஆனால் இந்திய அரசு அனுமதியளிக்க வாய்ப்பேயில்லை. இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று ஆடுவதை பிசிசிஐயுமே விரும்பவில்லை. அதனால், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் பலம் வாய்ந்த கிரிக்கெட் அமைப்பு பிசிசிஐ தான் என்ற வகையில், ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடக்காது; இந்தியா - பாகிஸ்தானுக்கு பொதுவான இடத்தில் தான் ஆசிய கோப்பை நடத்தப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார்.