
ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஆகஸ்ட் 18ஆம் தேதி நாளை துவங்கும் இந்த ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடருக்காக கேஎல் ராகுல் தலைமையில் 16 வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பந்த் போன்ற சீனியர் வீரர்கள் ஆசிய கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்பதன் காரணமாக அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
மேலும் இந்த இளம் இந்திய அணிக்கு விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியாளராக செயல்பட இருப்பதாலும் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வாய்ப்பினை பெற்ற தமிழக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக இந்த அணியில் இருந்து வெளியேறியதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.