
இங்கிலாந்து அணி 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை ஆகியவற்றை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தவர் பென் ஸ்டோக்ஸ். ஆனால் கடந்த ஆண்டு திடீரென ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
அண்மையில் ஆஷஸ் தொடரின் போது ஒருநாள் உலகக்கோப்பை விளையாடுவீர்களா என்ற கேள்விக்கு கூட, எனது ஓய்வு முடிவை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்று தெரிவித்தார். ஆனால் இங்கிலாந்து உலகக்கோப்பை அணி தேர்வு செய்யப்பட்ட போது, பென் ஸ்டோக்ஸின் பெயரும் சேர்க்கப்பட்டது. அதற்கு முன், இங்கிலாந்து கேப்டன் பட்லர், ஸ்டோக்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான் 3ஆவது ஒருநாள் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் அபார சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். 76 பந்துகளில் சதம் விளாசி பென் ஸ்டோக்ஸ், 124 பந்துகளில் 182 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில், அதிகபட்ச ஸ்கோரை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.