
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. இந்த உலகக்கோப்பைக்காக அனைத்து நிகளுமே தங்களது தயாரிப்புகளை தொடங்கிவிட்டன. ஒவ்வொரு நாடும் உலக கோப்பையில் விளையாடும் தங்களது 15 பேர் கொண்ட அணியை செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி காலக்கெடு விதித்திருக்கிறது. மேலும் அறிவிக்கப்பட்ட அணியில் மாற்றங்களை செய்வதற்குரிய கடைசி தேதி செப்டம்பர் 27 ஆகும் . இதனால் உலக கோப்பையில் விளையாடும் நாடுகள் தங்களது அணி தேர்வில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
இதனை கருத்தில் கொண்டு தான் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டி தொடரை பரிசோதனை களமாக பயன்படுத்தியது. கே.எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் உடற்தகுதி குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் ஒருவேளை அவர்கள் இருவரும் காயம் காரணமாக அணியில் இடம் பெற முடியாவிட்டால் அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களை தயார்படுத்துவதற்கு இந்தியா பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது கேஎல் ராகுல்,ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் கூடிய விரைவிலேயே உடர் தகுதியை பெற்று விடுவார்கள் என்று செய்திகள் வெளியாகி இந்திய ரசிகர்களை ஆறுதல் படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது ஓய்வை திரும்பப் பெறுவதற்கு தயாராக இருப்பதாகவும் உலகக் கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாட அவர் முடிவு செய்துள்ளதாகவும் அந்நாட்டு பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருக்கிறது . இது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்து வரும் பென் ஸ்டோக்ஸ், கடந்த வருடம் ஒரு நாள் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். மேலும் ஓய்வை திரும்பப்பெறும் எண்ணம் இல்லை என்றும் கூறியிருந்தார் .