
நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியான அணுகுமுறையில் விளையாடி முதல் போட்டியில் 267 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த நிலைமையில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் ஃபாலோ ஆன் பெற்ற நியூசிலாந்து மீண்டும் தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நாளில் மிரட்டலாக பந்து வீசி இங்கிலாந்தை 258 ரன்களை வெற்றிகரமாக துரத்த விடாமல் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் வரலாற்றில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்தது.
அப்படி பரபரப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் இங்கிலாந்தின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முழங்கால் காயத்தை சந்தித்தார். அதனால் 2ஆவது இன்னிங்ஸில் 2 ஓவர்கள் மட்டுமே வீசிய அவர் ஃபீல்டிங் செய்யவும் தடுமாறியது இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்படுத்திய கலக்கத்தை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைத்தது என்றே கூறலாம். ஏனெனில் 2023 ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதியன்று தொடங்கும் நிலையில் 16.25 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட அவர் விளையாடாமல் போனால் அது சென்னை அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை சந்தேகமில்லை.
சொல்லப்போனால் ஆஷஸ் தொடருக்காக ஐபிஎல் தொடரின் கடைசி சில போட்டிகளில் பங்கேற்க மாட்டேன் என்று ஏற்கனவே அவர் அறிவித்துள்ளது சென்னை அணிக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலைமையில் முழங்கால் காயத்தால் அவர் சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா எந்த கேள்விகள் எழுந்துள்ளன. இருப்பினும் ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் இருப்பதாலும், ஆஷஸ் தொடருக்கு இன்னும் 4 மாதங்கள் இருப்பதாலும் நிச்சயமாக அதற்குள் குணமடைந்து விளையாடுவேன் என்று பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.