
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க அணி அங்கு முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை மழையால் 1 – 1 (3) என்ற கணக்கில் சமன் செய்த நிலையில் அதன் பின் நடந்த டி20 தொடரில் அபாரமாக செயல்பட்டு 2 – 1 (3) என்ற கணக்கில் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து கோப்பையை வென்றது. அந்த நிலைமையை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 17இல் உலகப் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
முன்னதாக 2017 முதல் பெரும்பாலும் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்ததால் அதிரடியாக நீக்கப்பட்ட ஜோ ரூட்டுக்கு பதில் இங்கிலாந்தின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளராக அதிரடியை மட்டும் விரும்பக்கூடிய நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கலம் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். அவர்களது தலைமையில் டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை சொந்த மண்ணில் எதிர்கொண்ட அந்த அணி 3 போட்டிகளிலும் நிர்ணயிக்கப்பட்ட 250+ ரன்களை 4ஆவது இன்னிங்சில் அதிரடியாக விளையாடி அசால்டாக சேஸிங் செய்து 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றி பெற்றது. அதனால் பூரிப்படைந்த அந்நாட்டு முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் இந்த புதிய கூட்டணியின் அதிரடி பாதைக்கு “பஸ்பால்” என பெயரிட்டு கொண்டாடத் துவங்கினர்.
அதை தொடர்ந்து நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் வெற்றிபெற்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தியது. அதனால் உலகிலேயே “பஸ்பால்” எனும் இங்கிலாந்தின் புதிய அதிரடி பாதைக்கு நிகர் வேறு எதுவுமில்லை என்று அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடினர். அதைவிட இந்த உலகிற்கே டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கப் போவதாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பகிரங்கமாக பேட்டி கொடுத்தார்.