
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நாளை (டிசம்பர் 14) நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட்டின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏனெனில் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் சதமடித்து அசத்தியதுடன் அணியின் வெற்றியிலும் மிக முக்கிய பங்கினை வகித்தார். இதனால் இப்போட்டில் அவர் எவ்வளவு ரன்களைச் சேர்ப்பார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதேசமயம் பிரிஸ்பேன் மைதானத்தில் டிராவிஸ் ஹெட் விளையாடிய கடைசி மூன்று இன்னிங்ஸ்களில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்துள்ளார். இருப்பினும் இந்த மைதானத்தில் அவரது பேட்டிங் சராசரியானது 50.26ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நவீன கால கிரிக்கெட்டின் பேட்டிங் ஜாம்பவான்களில் ஒருவராக டிராவிஸ் ஹெட் மாறுவதற்கான பாதையில் பயணித்து வருவதாக முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.