
தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் கடைசி போட்டி நாளை ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெற இருக்கிறது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்க அணி இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 24ஆம் தேதி டர்பனிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 5ஆம் தேதி கிங்ஸ்மீத்திலும் நடைபெற்றவுள்ளது. அதன்பின் தென் ஆப்பிரிக்க அணியானது பகிஸ்தான் அணியுடன் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது.
அதன்படி தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது டிசம்பர் 10ஆம் தேதி முதலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரானது டிசம்பர் 17ஆம் தேதி முதலும், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது டிசம்பர் 26ஆம் தேதி முதலும் என தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. இத்தொடர்களுக்காக தென் ஆப்பிரிக்க அணியும் தயாராகி வருகிறது.