
நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஹர்திக் பாண்டிய தலைமையிலான இந்திய டி20 அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை மூத்த வீரர் ஷிகர் தவான் வழிநடத்த உள்ளார்.
இந்நிலையில், இந்த தொடருக்கு முன்னதாக கேப்டன் தவான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஆடும் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு ஏன் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து விவரித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், “பெரும்பாலும் ஒவ்வொரு வீரரும் கடந்த தொடரில் சிறப்பாகச் செயல்பட்டாலும், ஆடும் லெவனில் இல்லாத இந்தக் கட்டத்தைக் கடந்து செல்கிறார்கள். தொடர்பு முக்கியமானது, பயிற்சியாளர்களும் கேப்டன்களும் வீரர்களுடன் பேசுகிறார்கள். சாம்சன் போன்ற வீரர்களுக்கு அவர்கள் ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை என்பதில் தெளிவு உள்ளது. அடிப்படையில், இது அணியின் நன்மை மற்றும் அணி சேர்க்கைகள் காரணமாகும், ”என்று அவர் கூறினார்.