டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் வீரர்களுக்கு உடல்நலக்குறைவு; அரையிறுதியில் விளையாடுவார்களா?
அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான், சோயிப் மாலிக் இருவரும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர்.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் 2ஆவது அரையிறுதியில் பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் இன்று மோதுகின்றன. இந்நிலையில் பாகிஸ்தானின் முக்கிய வீரர்களான முகமது ரிஸ்வானும் சோயிப் மாலிக்கும் காய்ச்சலால் அவதிப்படுகிறார்கள்.
இருவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கரோனா இல்லை எனத் தெரிய வந்துள்ளது. புதன் அன்று காலையில் இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பயிற்சியில் பங்கேற்பதைத் தவிர்த்தார்கள். இதனால் இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் இருவரும் பங்கேற்பார்களா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருவருடைய உடற்தகுதியை முன்வைத்து பாகிஸ்தான் அணி இதுகுறித்த முடிவை எடுக்கவுள்ளது.
இருவரில் ஒருவர் விளையாடாமல் போனாலும் பாகிஸ்தான் அணிக்குப் பெரும் பின்னடைவாக இருக்கும். ஏனெனில் டி20 உலகக் கோப்பைப் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் முகமது ரிஸ்வான் 3ஆம் இடத்தில் உள்ளார். குறைந்த பந்துகளில் அரை சதம் எடுத்த பாகிஸ்தான் வீரர் என்கிற பெருமையை சோயிப் மாலிக் பெற்றுள்ளார். பாகிஸ்தான் அணியின் நடுவரிசையில் முக்கிய வீரராகவும் உள்ளார்.
Also Read: T20 World Cup 2021
ரிஸ்வானால் இன்று விளையாட முடியாமல் போனால் விக்கெட் கீப்பரும் முன்னாள் கேப்டனுமான சர்பராஸ் அகமது அணியில் சேர்க்கப்படுவார். சோயிப் மாலிக்குக்குப் பதிலாக ஹைதர் அலி சேர்க்கப்பட்டு, ஃபகார் ஸமான் தொடக்க வீரராகக் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now