
நியூசிலாந்து அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனைத்தொடர்ந்து நியூசிலாந்து அணி ஆஸ்திரேலிய அணிக்கெதிராக 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு, அதில் முக்கிய வீரர்கள் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் அதிரடி வீரர் டேரில் மிட்செல் ஆகியோர் இத்தொடரிலிருந்து விலகியுள்ளனர். மேலும், ஜிம்மி நீஷம் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோரும் காயம் காரணமாக அணியில் இடம்பிடிக்கவில்லை.
இதன்காரணமாக மிட்செல் சாண்ட்னர் நியூசிலாந்து டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் மீண்டும் நியூசிலாந்து அணிக்கு திரும்பியுள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அவர்களுடன் கிளென் பிலீப்ஸ், டிம் செய்ஃபெர்ட், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, லோக்கி ஃபர்குசன், மேட் ஹென்றி ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.