
இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி கௌகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷானகா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு விராட் கோலி 113 ரன்களும், ரோஹித் சர்மா 83 ரன்களும், சுப்மன் கில் 70 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 373 ரன்கள் குவித்தது.
இதன்பின் 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய இலங்கை அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான பதும் நிஷான்கா 72 ரன்களும், இறுதி வரை தன்னால் முடிந்தவரை போராடிய இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷானகா 108* ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தங்களது பங்களிப்பை செய்து கொடுக்க தவறியதால் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் மட்டுமே எடுத்த இலங்கை அணி, 67 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இந்தநிலையில், இந்திய அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டனான தசுன் ஷானகா, பந்துவீச்சில் சொதப்பியதே தோல்விக்கான முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.