
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து மகளிர் அணி ஆஷஸ் தொடரில் விளையாடின் வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (ஜனவரி 14) மெல்போர்னில் உள்ள ஜங்ஷன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு ஃபோப் லிட்ச்ஃபீல்ட் - கேப்டன் அலிசா ஹீலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்ப்டுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் இருவரும் இணைந்து 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அலிசா ஹீலி 29 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான போப் லிட்ஃபீல்டும் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின் களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி ஒருபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய பெத் மூனி 12 ரன்களிலும், அனபெல் சதர்லேண்ட் 11 ரன்னிலும் ஆட்டமிழக்க, அரைசதம் கடந்து அசத்திய எல்லிஸ் பெர்ரியும் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 60 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய நட்சத்திர வீராங்கனைகள் ஆஷ்லே கார்ட்னர், தஹ்லியா மெக்ராத் மற்றும் அலனா கிங் உள்ளிட்டோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.