
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர்-1 ஆட்டத்தில் சென்னை - குஜராத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை நிர்ணயித்த 173 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
இருப்பினும் அப்போட்டியில் 15வது ஓவரின் முடிவில் மதிசா பதிரனா ஓய்வெடுப்பதற்காக பெவிலியன் சென்று 4 நிமிடங்கள் தாமதமாக திரும்பியதால் அடுத்த ஓவரை வீசுவதற்கு தோனி அழைத்த போது நடுவர்கள் மறுப்பு தெரிவித்தனர். குறிப்பாக களத்திற்குள் வந்து 4 நிமிடங்கள் முடிந்த பின்பு தான் அவரை பந்து வீச அனுமதிக்க முடியும் என்று நடுவர்கள் தோனியிடம் தெளிவாக கூறிவிட்டனர். ஆனால் அந்த ஓவரை வீசுவதற்காக ஏற்கனவே திட்டமிட்டய 3 ஓவர்களை அவருக்காக ஒதுக்கி தோனி வைத்திருந்தார்.
அதனால் கடைசியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 20 ஓவர்களை வீசி முடிக்காமல் போனால் அதற்கான அபராதத்தை ஏற்றுக் கொள்ள தயார் ஆனால் அடுத்த ஓவரை அவர் தான் வீச வேண்டும் என்று தோனி விடாப்பிடியாக நடுவர்களிடம் சொல்லிக்கொண்டே காலத்தை கடத்தினார். அதற்குள் 4 நிமிடங்கள் முடிவுக்கு வந்த நிலையில் நடுவர்களும் அடுத்த ஓவரை பதிரனா வீசுவதற்கு அனுமதி கொடுத்ததால் சுமார் 5 நிமிடங்கள் கழித்து மீண்டும் போட்டி துவங்கியது.