
வெஸ்ட் இண்டீஸ் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 447 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் கிரைக் பிராத்வெயிட் மற்றும் தேஜ்நரைன் சந்தர்பால் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே சதமடித்தனர். 182 ரன்களை குவித்த பிராத்வெயிட் இரட்டை சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். பிராத்வெயிட் - சந்தர்பால் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 336 ரன்களை குவித்தனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதத்தை விளாசிய தேஜ்நரைன் சந்தர்பால், தனது முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றி சாதனை படைத்தார். 207 ரன்களை குவித்து கடைசிவரை சந்தர்பால் ஆட்டமிழக்கவில்லை. 6 விக்கெட் இழப்பிற்கு 447 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸை வெஸ்ட் இண்டீஸ் அணி டிக்ளேர் செய்தது.