
பிரெண்டன் டெய்லர் சதம்: ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆப்பிரிக்க பிராந்திய அணிகளுக்கு இடையேயான தகுதிப் போட்டியில் ஜிம்பாப்வே அணியின் அனுபவ வீரர் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதில் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் இருந்து பங்கேற்கும் அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் போட்ஸ்வானா அணிகள் மோதின. ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற் போட்ஸ்வானா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் மருமணி 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் பிரையன் பென்னட்டுடன் இணைந்த அனுபவ வீரர் பிராண்டன் டெய்லர் அபாரமாக விளையாடியதுடன், மைதானத்தின் அனைத்து திசைகளுக்கும் பந்துகளை பறக்கவிட்டார். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராண்டன் டெய்லர் 46 பந்துகளில் டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.