
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இபோட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு பெவிலியன் திரும்பினார்.
அவரைத்தொடர்ந்து மார்கஸ் ஸ்டொய்னிஸ் 19 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 42 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குர்னால் பாண்டியா 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 43 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சாம் கரண் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷிகர் தவான் - ஜானி பேர்ஸ்டோவ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் 100 ரன்களை கடந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.