
2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்தப் பிறகு, இந்திய அணி தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகி ரவி சாஸ்திரி, தற்போது கிரிக்கெட் வர்ணனை செய்து வருகிறார். ஐபிஎல் 16ஆவது சீசனுக்கும் இவர் வர்ணனை செய்து வருகிறார். இந்நிலையில், தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள இவர், தீபக் சஹாரை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். காரணம், தீபக் சஹாரின் பிட்னஸ்தான்.
தீபக் சஹார் கடந்த சில வருடங்களாகவே காயம் காரணமாக தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார். இதனால், கடந்த டி20 உலகக் கோப்பை 2022 தொடரில் தீபக் சஹாரால் இடம்பிடிக்க முடியவில்லை. பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து குணமடைந்த அவர், கடந்த டிசம்பர் மாதம் வங்கதேசத்திற்கு எதிராக ஒருநாள் தொடரில் களமிறங்கினார். அப்போதும் காயம் ஏற்பட்டதால், மீண்டும் பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமிக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
இதையடுத்து, தற்போது ஐபிஎல் 16ஆவது சீசனில் தீபக் சஹார் கம்பேக் கொடுத்துள்ளார். இருப்பினும், ஒருசில போட்டிகளில் விளையாடிப் பிறகு தற்போது அதே இடத்தில் மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், மீண்டும் பெங்களூர் சென்று சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.