X close
X close
Indibet

தோனியின் நீண்ட நாள் சாதனையை முறியடித்த ஹர்மன்ப்ரீத் கவுர்!

ஆடவர் அல்லது மகளிர் என ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை குவித்த இந்திய கேப்டன் என்ற ஜாம்பவான் எம்எஸ் தோனியின் ஆல் டைம் சாதனையை ஹர்மன்ப்ரீத் கவுர் தகர்த்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

By Bharathi Kannan August 01, 2022 • 15:47 PM

காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளின் நடப்பாண்டு சீசன் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம்ம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 24 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இம்முறை மகளிர் டி20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா உட்பட உலகின் டாப் 8 அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

இந்த தொடரில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில் தோல்வியடைந்ததால் வென்றே தீரவேண்டும் என்ற இந்நிலையில் தனது 2ஆவது போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது.

Trending


பர்மிங்காம் நகரில் நேற்று மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற அப்போட்டி மழையால் 18 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் 18 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பரிதாபத்தை சந்தித்தது. பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஸ்னே ராணா மற்றும் ராதா யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். 

அதைத் தொடர்ந்து 100 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு நட்சத்திர தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் பவர் பிளேயில் அதிரடியாக பவுண்டரிகளை பறக்கவிட்டு 61 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தனர்.

அதில் ஷபாலி வர்மா 2 பவுண்டரி 1 சிக்சருடன் 16 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் 8 பவுண்டரி 3 சிக்சருடன் அரைசதம் அடித்து 63* (42) ரன்கள் விளாசிய நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா கடைசி வரை அவுட்டாகாமல் சூப்பர் பினிசிங் கொடுத்தார். அதனால் 11.4 ஓவரிலேயே 102/2 ரன்களை எடுத்த இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வாழ்வா – சாவா போட்டியில் அசத்தியது. 

இதனால் பார்படாஸ் அணிக்கு எதிரான தனது கடைசி போட்டியில் வென்றால் அரையிறுதி சுற்றுக்கு செல்லலாம் என்ற நல்ல நிலைமைக்கு இந்தியா போராடி வந்துள்ளது. முன்னதாக சமீபத்தில் ஓய்வு பெற்ற ஜாம்பவான் வீராங்கனை மிதாலி ராஜ்க்கு பின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்றுள்ள நம்பிக்கை நட்சத்திரம் ஹர்மன்பிரீத் கவுர் இந்த தொடரில் இந்தியாவை வழிநடத்தி வருகிறார். 

குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா தடுமாறியபோது அட்டகாசமாக பேட்டிங் செய்த அவர் 52 ரன்கள் குவித்து காமன்வெல்த் போட்டிகளில் அரைசதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சரித்திரத்தை படைத்தார்.

இந்நிலையில் இப்போட்டியில் அவரது தலைமையில் இந்தியா வெற்றியை பதிவு செய்ததால் ஆடவர் அல்லது மகளிர் என ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை குவித்த இந்திய கேப்டன் என்ற ஜாம்பவான் எம்எஸ் தோனியின் ஆல் டைம் சாதனையை தகர்த்த அவர் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2012 முதல் பகுதிநேர கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் கடந்த 2017 உலகக் கோப்பைக்கு பின் முழுநேர டி20 கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் இதுவரை 71 போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய மகளிர் அணி 42 வெற்றிகளை 61.76% என்ற சிறப்பான சராசரியில் குவித்து வருகிறது. 26 தோல்விகளைச் சந்தித்தது, 3 போட்டிகள் முடிவின்றி போனது.

இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 2007 டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி 41 வெற்றிகளை பதிவு செய்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. 

  • ஹர்மன்பிரீத் கவுர் : 42*
  • எம்எஸ் தோனி : 41
  • விராட் கோலி : 30
  • ரோஹித் சர்மா : 27

மேலும் ஏற்கனவே அவர் மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை குவித்த இந்திய கேப்டனாகவும் சாதனை படைத்துள்ளார். எனவே இந்த காமன்வெல்த் போட்டிகளில் இதேபோல் இந்தியாவை வழிநடத்தி இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை வென்று கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது


Win Big, Make Your Cricket Prediction Now