
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 26வது லீக் போட்டியானது இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இப்ட்டியில் இலங்கை அணியும் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியானது இலங்கை அணியை அதிரடியாக எதிர்கொண்டு விளையாட வேண்டும் என்று நினைத்து முதல் 5 ஓவர்களில் போட்டியை அதிரடியாக தொடங்கினாலும், அதன் பின்னர் 7 ஆவது ஓவரில் முதல் விக்கெட்டை இழக்க அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாக வீரர்கள் மைதானத்திற்கு வருவதும் போவதுமாக இருந்தனர். இதன் காரணமாக 33.2 ஓவர்களில் இங்கிலாந்து அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 156 ரன்கள் மட்டுமே குவித்தது.
இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 43 ரன்களையும், பேர்ஸ்டோவ் 30 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது 25.4 ஓவர்களிலேயே 2 விக்கெட்டை மட்டும் இழந்து 160 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி சார்பாக துவக்க வீரரான பதும் நிசாங்கா 77 ரன்களுடனும், சதீரா சமர விக்ரமா 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இலங்கை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.